சென்னை:

திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நாங்குநேரி தொகுதியுடன், விக்கிரவாண்டி தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதா மணி திடீரென மரணம் அடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக, காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் ராஜினாமாவை தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட  நாங்குனேரி தொகுதியுடன் சேர்த்து இரு தொகுதிகளுக்கும் செப்டம்பரில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

நாங்குனேரி தொகுதியில் காங்கிரசே மீண்டும் போட்டியிட விரும்புவதாக தகவல் பரவி வருகிறது. வசந்தகுமார் தனது மகனும் நடிகருமான விஜய் வசந்தை அரசியலில் களமிறங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், திமுக போட்டியிட முயற்சி செய்து, அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுபோல, வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும் மீண்டும் தேர்தல்  அறிவிக்கப்பட லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.