சென்னை,
தீபாவளிக்கு வர இருக்கும் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. பல சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இன்னும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் மெர்சல் படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100-வது படமாக இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 3 விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகளும் நடித்துள்ளனர். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்,
ஏ.ஆர். ரஹ்மான் இசையத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் என். ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், நடிகர் விஜய் நடிப்பில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளி நாளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. வழக்கமாக திரைக்கு வரும் புதிய படங்களை இணையத்தளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடுவதால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ‘மெர்சல்’ படத்தை திரையிடாமல் இருக்க சம்பந்தப்பட்ட இணையத்தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மெர்சல் படத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு 2,650 இணையத்தள நிறுவனங்களுக்கு தடை விதித்து, இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.