சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்  இறுதிஊர்வலம் மதியம் 1மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவால் தமிழ்நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  மாநிலம் முழுவதும் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் சென்னையில் குவிந்து வருகின்றனர்.  மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவரது உடல் இன்று இன்று (டிச.29) காலை சுமார் 6:00 மணியளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சென்னை உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவித்திடலில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் கண்ணீருடன்  அஞ்சலி சலுத்தி வருகின்றனர். மறைந்த விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று மதியம் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு  அஞ்சலி செலுத்த பல ஆயிரம் பேர் காத்துக்கொண்டிருக்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தீவு திடலில் குவிந்து வருகின்றனர். அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

 

மதியம் 1 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் என்றும், அதைத்தொடர்ந்து,   1 மணிக்குப் பின் இறுதி ஊர்வலம் தொடங்கி மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தீவுத்திடலில் இருந்து புறப்படும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம், சென்ட்ரல் வழியாக பூந்தமல்லி ஐரோடு  மூலம் கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம் தாண்டி கோயம்பேடு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக விஜயகாந்த் உடலை பொது இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்தது.  மேலும்,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக ராஜாஜி மண்டபத்தில் அவரது உடலை வைக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர்  ஏற்க மறுத்துவிட்டு தீவுத்திடலில் அவரது உடலை அஞ்சலிக்காக வைத்துள்ளனர்.

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ‘கேப்டன் விஜயகாந்த்’ – வாழ்க்கை வரலாறு