டிகரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவால்  கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் ( (வயது 71),  கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு  மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரக்கு  விஜயகாந்த்கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில்,  விஜயகாந்த் இன்று அதிகாலை உயிரிழந்தார்.  நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டது.  அதுபோல தெமுதிக தலைமை அலுவலகம் உள்பட பல இடங்களில் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

மறைந்த விஜயகாந்த் உடல் மருத்துவமனையில்  ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு வந்ததடைந்தது; இல்லத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கண்ணீர் மல்க அழுது தங்களது இறுதி அடஞ்சிலையை செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் மவுன அஞ்சிலி செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நெசவாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கைத்தறி நெசவாளர்கள் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை துவக்க வைக்க வருகை தந்த  கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் காந்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஆளுநர்  ஆர்.என்.ரவி:

ஆளுநர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்…. நல்ல அரசியல் தலைவர்…. நல்ல மனிதர்…. நல்ல சகோதரர்…. ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம். சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர் களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என பதிவிட்டிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான திரு.விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். இதையும் படியுங்கள்: விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காங். கமிட்டி:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன்:

சட்டமன்றத்தில் விஜயகாந்துடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை மறக்க முடியாது என கே.பாலகிருஷ்ணன் இரங்கல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக தலைவர் வைகோ :

சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,தேமுதிக தொண்டர்களுக்கும் ,அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது. நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரை உலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர். ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார். தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கு தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:
அனைவர் மீதும் எல்லையில்லா அன்பு, அக்கறை காட்டியவர் விஜயகாந்த் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்த் மறைவு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ்த்திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு. மிகுந்த இரக்க குணமும், மனிதநேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு அவரது இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்திரை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமக தலைவர் சரத்குமார்:

அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது. அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கனிமொழி எம்.பி.

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்:

விஜயகாந்துடன் நெருங்கி பழகிய நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது என்று கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு

மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதனை இழந்துவிட்டோம் என தனது எக்ஸ் தளத்தில் நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர்
அருமை நண்பர் விஜயகாந்த் இயற்கை எய்தார் என்ற செய்தி இதயத்தை ஈட்டி போல் தாக்கியது. திரையுலகில் ஒரு நடிகராய் உதயமாகி புரட்சி கலைஞராய் பெயரெடுத்தவர் விஜயகாந்த் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார்:
அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர் விஜயகாந்த் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். சாமந்திப்பூ படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார்; புதுயுகம் படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

நடிகர் விக்ரம் 

மிகவும் அன்பான, அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் மறைந்தது வருத்தம் அளிக்கிறது என நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து

எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார் திரையில் நல்லவர் ; அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர் கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர் கலைஞர் ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல்செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரம் தொட்டவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது  காலம் வருந்துகிறேன் கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

நடிகை ரோஜா:

பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.