‘’புதன்கிழமை  பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதற்குள் கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துவிடவேண்டும்’’ என்று அமீத்ஷாவிடம் இருந்து ஓலை வநத பிறகே அ.தி.மு.க.வின் இரு ஒருங்கிணைப்பாளர்களும் நேரடியாக களம் இறங்கினர்.

அ.தி.மு.க.வில் பேசிக்கொண்டிருந்த பாரிவேந்தர் திடுதிப்பென தி.மு.க.வில் ஐக்கியமாக-

எச்சரிக்கை அடைந்த அ.தி.மு.க.மேலிடம்- முறுக்கிகொண்டிருக்கும் நட்பு கட்சிகளிடம் புதிய அன்பு பொழிந்தது.புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை அவசரமாக அழைத்து பேசி-ஒரு இடம் அளித்து உடன்பாட்டில் கையெழுத்து வாங்கியது.

இதே  போல் ஊசலாட்டத்தில் இருந்த ஏ.சி.சண்முகம், ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் தலா ஒரு தொகுதி –முடிவாகி விட்டது.

பாக்கி இருப்பது –தே.மு.தி.க.மட்டுமே.ஆரம்பத்தி ல் இருந்தே ‘’பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் 7 லோக்சபா +ஒரு ராஜ்யசபா +இத்யாதி’’ என்பதில் உறுதியாய் ஒற்றைக்காலில் நின்றது கேப்டன் கட்சி.

கடைசியாய் நடந்த பேச்சு வார்த்தையில் ‘5 தொகுதிகளுக்கு சம்மதித்த தே.மு.தி.க. – விட்டுக் கொடுத்த 2 இடங்களுக்கு பதிலாக கூடுதல் ‘இத்யாதி’கேட்க- அதற்கும் ஓ.கே.சொன்னது அ.தி.மு.க.

இன்று இரு கட்சிகளுக்கும் இடையே கையெழுத்து ஆக விருந்த நிலையில் –நேற்று விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் –குட்டையை குழப்பிவிட்டுள்ளார்.அ.தி.மு.க. வில் தான் கேட்டது கிடைக்காத தால் –அவருக்கு கடும் அதிருப்தி.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த விஜயகாந்தை தன் பங்குக்கு மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார் என்கிறார்கள்- அரசியல் வட்டாரத்தில்.

‘’கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கிறார் டி.டி.வி.தினகரன்.அவருடன் சேர்ந்தால் நாம் கேட்கும் தொகுதிகளும் கிடைக்கும். கேட்காததும் கிடைக்கும்’’ என்று சரத்குமார் ஆசை வார்த்தை கூற-

ரொம்ப நேரம் யோசித்திருக்கிறார்- கேப்டன்.

அ.தி.மு.க.வுடன் சேர்ந்தால் பா.ம.க,வினர் அவர்கள் ஏரியாவில் நம்மை திட்டமிட்டு தோற்கடிப் பார்கள் என்ற கவலையில் இருந்த விஜயகாந்துக்கு –சரத் யோசனை சரியாகவே பட்டது.

அதன் காரணமாகவே தரமாட்டார்கள் என்று தெரிந்தும்- சட்டசபைக்கு இடைத்தேர்தல்  நடக்கும் தொகுதிகளிலும் பங்கு வேண்டும் என்று புது கோரிக்கை வைத்துள்ளார் கேப்டன்.

அ.தி.மு.க. மேலிடம் எரிச்சலாகி விட்டது. தே.மு.தி.க.வுடன் பேச்சு வார்த்தையை முறித்து –கதவை  மூடிவிட்டதாக சொல்கிறார்கள்.

சரத்குமாரின் திட்டத்தை பற்றி –ஆலோசிக்க கட்சியின் உயர் மட்ட கூட்டத்தை நாளை நடத்துகிறார் –கேப்டன். டி.டி.வி.யுடன் சேர்ந்தால் கட்சிக்கு கிடைக்கும் லாப-நஷ்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தே.மு.தி.க.வட்டாரங்கள் தெரிவித்தன.

—பாப்பாங்குளம் பாரதி