தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16 காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஏப்ரல் 17 காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்த விவேக் தனது 1 கோடி மரக்கன்றுகள் நடும் கனவை எட்டிப்பிடிக்கும் முன் இந்த உலகை விட்டு மறைந்தார்.

அவர் இறுதிச்சடங்கில் கூட ஏராளமான ரசிகர்கள் கைகளில் மரக்கன்றுகளுடன் கலந்து கொண்டனர். இந்நிலையில் விவேக்கின் 1 கோடி மரங்கள் நடும் கனவை நனவாக்க மறைமலைநகர் நகராட்சியில் 1 லட்சம் மரம் நடுவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.