சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சசோதனை நடத்த வருகின்றனர். இதையடுத்து, அவர்மீது  சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.  இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இவர் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தனது சொந்த தொகுதியான கரூரில், முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில்,  எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது,  வீடு, சாயப்பட்டறை தொழிற்சாலை, அட்டைப்பெட்டி தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் அதிகாலை 5.30 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள வீடு, அலுவலகம், மற்றும் சென்னையில் உள்ள வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த பல மணி நேரமாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறத்து சென்னையில் ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் செல்வம், தங்களிடம் அனைத்துக்கும் சரியான கணக்கு உள்ளது. இதனால், எந்த பிரச்சினையும் இல்லை. ஆவணங்கள் எல்லாம் தெளிவாக இருக்கின்றன; எந்த குழப்பமும் இல்லை. வழக்குப்பதிவு என்பது நடைமுறை தான். ஆதாரங்கள் எதுவும் விஜயபாஸ்கருக்கு எதிராக கிடைக்கவில்லை. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்று கூறினார்.