சென்னை: முன்னாள்அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு உள்பட 52 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த வாரம் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்  சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித் துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர். இது  தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. அரசு ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எஸ்.பி. வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசு கட்டுமானப் பணிகளில் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே வேலுமணி மீது திமுக சார்பில் கவர்னரிடம் ஊழல் பட்டியலும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை  10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.பி. வேலுமணியின் வீடு மட்டுமின்றி அவருடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் சென்னையில் 15 இடங்களிலும், கோயம்புத்தூரில் 35 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒரு இடத்திலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக சென்னை உள்ளிட்ட இடங்களில் 2014 முதல் 2018 வரை நடந்த பல்வேறு திட்டப்பணிகளில் முறைகேடு என்று புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. செந்தில் அண்ட் கோ பங்குதாரர் அன்பரசன், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், கே.சி.பி. என்ஜினீயர்ஸ் வேளாண் இயக்குனர் சந்திரபிரகாஷ், இயக்குனர் சந்திரசேகர், எஸ்.பி.பில்டர்ஸ் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, சி.ஆர்.கன்ஷ்ட்ரக்ஷன், ராஜன் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் எப்.ஐ.ஆறில் சேர்க்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடி ஊழல் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையடுத்தே இன்று ரெய்டு நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடப்பதாக வந்த தகவலை அடுத்து அதிமுகவினர் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.