டோகாலா
இந்திய சீன எல்லையில் டாங்கிகள், வீரர்கள், ராணுவ வாகனங்கள் மலைப்பகுதியை நோக்கி செல்வது போன்ற வீடியோ வெளியாகி போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகள் சிக்கிம் மாநில எல்லையையொட்டி உள்ளன. அந்த எல்லப் பகுதிக்கு மூன்று பெயர்கள் உண்டு. டோகா லா என இந்தியாவும், டோகாலாம் என பூடானும், டோங்லாங் என சீனாவும் பெயரிட்டுள்ளன. இந்த எல்லைப் பகுதியில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என 2012–ம் ஆண்டு எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தற்போது அந்த எல்லைப் பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியை சீனா நடத்தி வருகிறது. இதற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவுக்கு கடிதம் எழுதியது.
இதை தொடர்ந்து அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டு உள்ளதால் இந்தியா–சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
சிக்கிமின் டோக்கலாத்தில் இராணுவ டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை சீன இராணுவம் இந்தியாவுக்கு எதிராக போரிடுவதற்கு நகர்த்தியது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியில் மலைப்பகுதியை நோக்கி 33 டாங்கிகள் ராணூவ வாகனங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் செல்வது போல காட்சி தெரிகிறது.
டோக்கலம் எல்லையில் இராணுவ வலிமையை அதிகரிப்போம் எனற சீனா அறிவித்தது. அதனையொட்டியே இது நடைபெறுகிறது. சமூக ஆர்வலர்கள், பல வலைதளத்திலும் உலவும் இந்த வீடியோ குறித்து பலவேறு ஐயங்களை கேட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ இன்டெல் க்ராப்பின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தளம் உலகளாவிய இராணுவ இயக்கங்களை கண்காணிக்கும் ஒரு வலைத்தளம் ஆகும்.
சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆதாரங்கள், இது தற்போது எடுக்கப்பட்டது இல்லை எனவும், இது பழைய வீடியோ மற்றும் இப்போது டோக்கலாம் எல்லையில் பதற்றம் எதுவும் இல்லை என தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் பாதுகாப்பு நிபுணர்கள் இந்த பழைய வீடியோ, சீனாவின் இந்தியா மீது உளவியல் செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது என தெரிவிக்கின்றனர்..