கொழும்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு ஜுரம். முந்தைய காலங்களை விட மூன்று மடங்கு மோசமாக உள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால், இதுவரை சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 பேர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புனரமைப்பு நிறுவனங்கள், இந்த ஜுரத்தை கட்டுப்படுத்த அரசால் இயலவில்லை என தெரிவித்துள்ளன.
நேற்று வரை 105133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. இது சென்ற முறையக் காட்டிலும் இருமடங்காகும். போன வருடம் 55150 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை இதுவரை 296 பேர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளனர்.
கொழும்பு நகரில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. அந்த நகரிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்குவது மிகவும் அதிகம். சமீபத்தில் பெய்த மழை நிலைமைய இன்னும் மோசமாக்கி உள்ளது. கொழும்பு நகரில் மட்டும் 44% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த கெர்கர்ட் தாச்சர், “எப்போதுமே மழைக்காலங்களில் இலங்கையில் டெங்குவின் தாக்கம் மிகுந்து காணப்படும், ஆனால் தற்போது மும்மடங்கு வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த கடும் முயற்சி எடுக்கப்பட்டும் பரவுவதை முழுவதுமாக தடுக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்தே டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிய வருகிறது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இவ்வளவு வேகமாக டெங்கு பரவி வருகிறது என செஞ்சிலுவை சங்கத்தின் மற்றொரு பிரமுகரான டாக்டர் நோவில் விஜிசேகர கூறியுள்ளார்,
இலங்கைக்கு உதவ பல நாடுகளும் முன்வந்துள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலிருந்து தடுப்பூசிகளும், மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளது.
டெங்கு ஜுரம் கொசுக்கடியினால் வருவது என்பதும், அந்தக் கொசு பகல் நேரத்திலேயே கடிக்கும் என்பதும் தெரிந்ததே. மழை காலம் முடிந்த பிறகுதான் கொசுக்களின் உற்பத்தையை கட்டுப்படுத்த முடியும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மழைக்காலம் முடியும் வரை மக்கள் காத்திருக்கலாம். நோய் காத்திருக்குமா?