சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவிலில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.

அதாவது, அய்யனார் கிழக்கு நோக்கி இருக்க எதிரே சற்று தெற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காளியம்மன் உள்ளார். பெண்கள் தங்கள் கணவர் நலம்பெற வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.

பலர் தங்கள் கணவர் குணம் அடைந்ததும் தங்களுடைய தாலியை காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டுகிறார்கள். அதன்படி குணம் அடைந்த பின் தாலியை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இப்படி ஆண்டுதோறும் தங்க தாலிகள் பல இங்கு காணிக்கையாக வருகின்றன.

அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.

இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க “நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு” என்று சொல்லும், வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை “நீதிபதி” என்றே அழைக்கின்றனர். பவுர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜைகள் உண்டு.

கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும். எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சோலைமலை, விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் நம்மை அதிகம் கவர்பவள் சூலாட்டுக்காளிதான்.

ஒன்றுக்கும் இல்லாத சிறிய விஷயம், தானே பெரியவர் என்ற குணத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதான தலம் இது. பிரச்சினையால் பிரிந்து விட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு கூடுதல் வழிபாடு என்னும் பிராத்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின் பிரச்சினை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் அம்பிகை முன் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.