ஸ்ரீநகர்:  மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்,  காங்கிரஸ் கட்சியின் அனைத்து முதன்மை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைமைமீது அதிருப்தியில் இருந்து வந்தார் முன்னாள் காஷ்மீர் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத். அதைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு  நடைபெற்ற “பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் சில இடைத்தேர்தல் களில் காங்கிரஸ் கட்சி தோற்றபோது கட்சி தலைவர்கள் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ஐந்து நட்சத்திர ஓட்டல் கலாச்சாரமே காரணம்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து கட்சியில் முழுமையாக ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள குலாம் நபி ஆசாத்துக்கு  ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் மோடி, குலாம்நபி ஆசாத்தை வெகுவாக புகழ்ந்ததுடன், அவர் தனது நெடுஙகால நண்பர் மற்றும் நாட்டின்மீது அக்கறை கொண்டவர், கர்வமில்லாதவர் என்றதுடன், குலாம்நபி ஆசாத் போன்றவர்கள் மீண்டும் இந்த சபைக்கு தேவை, அவரை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்யாவிட்டால், பாஜக தேர்வு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய பாஜக அரசுக்கு குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இதனால், குலாம்நபி ஆசாத் பாஜகவுக்கு தாவுவார் என தகவல்கள் பரவின. ஆனால், அதை ஏற்க மறுத்தவர், காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும்போது பாஜகவில் சேருகிறேன் என்று கூறி சலசலப்புகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம்  ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்ப்டடார். ஆனால்,  விகாா் ரசூல் வானியை ஜம்மு-காஷ்மீா் பிரதேசத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுபோல ரமண் பல்லா செயல் தலைவராகவும், துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவா் தாரிக் ஹமீத் காரா நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டனா்.

இதனால்  காங்கிரஸ்  தலைமையின் மீது அதிருப்தி கொண்ட குலாம் நபி ஆசாத், தனது பிரசார குழு தலைவர் பதவியை ஏற்க மறுத்து அறிவிப்பு வெளியிட்டார். இதனால் மேலும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்டு 26ந்தேதி) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகள், பொறுப்புகளில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து உள்ளார். ஆசாத்தின் அறிவிப்பு கட்சி தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குலாம்நபி ஆசாத், கட்சி தலைமைக்கு எதிரான அதிருப்தி தலைவர்களான  ஜி-23 தலைவா்களில்  ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் எப்போது ‘கருப்பு பனி’ பெய்யுமோ, அப்போது பாஜகவில் சேருகிறேன்! குலாம் நபி ஆசாத்

நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது – குலாம் நபி ஆசாத்

“பா.ஜ.க. வின் கைப்பாவையாக செயல்படும் குலாம் நபி ஆசாத்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடும் தாக்கு..