முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இன்று பார்த்தார்.
அவருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த ஆர். நல்லக்கண்ணு படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேலை பாராட்டினார்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவையும் பாராட்டிய அவர் பட குழுவினருடன் சிறிது நேரம் உரையாடினார். நடிகர் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
95 வயதாகும் நல்லக்கண்ணு வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவந்தார்.
ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு இந்த திரைப்படத்தை பாராட்டி இருப்பது இத்திரைப்படம் தொடர்பான சர்ச்சையை தொடர்கதையாக்கி உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.