பிரபல நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார் அவருக்கு வயது 72.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம்வந்தவர் சரத்பாபு.

1973ஆம் ஆண்டு ராம ராஜ்யம் என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரத்பாபு கடந்த 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1978 ஆம் ஆண்டு கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘நிழல் நிஜமாகிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அதே ஆண்டில் தமிழில் ரஜினியுடன் முள்ளும் மலரும் என்ற படத்தில் நடித்து “செந்தாழம் பூவில்” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவர்.

தொடர்ந்து கமல் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், ரஜினியுடன் நடித்த வேலைக்காரன், முத்து, அண்ணாமலை ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்பாபு இன்று மரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.