இந்திய திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வெளிநாட்டு விநியோகம் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ம் பாகமும் வசூலை வாரிக்குவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தங்கள் மொழி திரைப்படம் வெளியாகும் போது அந்த திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள் நமது நாட்டில் உள்ளது போல் மேல தாளங்களுடன் ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்துகின்றனர்.

அகண்டா திரைப்படம் வெளியானபோது பாலகிருஷ்ணா கட்-அவுட்டுக்கு தேங்காய் உடைத்து அதகளப்படுத்திய ரசிகர்கள்

இந்த திரைப்படங்களைக் காண வரும் அமெரிக்கர்களுக்கு இது ஒரு புது விதமான அனுபவமாக இருப்பதுடன் அவர்களுக்கு இந்தியர்கள் மீது உள்ள வெறுப்பை மேலும் அதிகரிக்க செய்கிறது.

ஏற்கனவே இந்தியர்கள் தங்கள் வேலைகளை பறித்துக் கொள்வதாக குற்றம்சாட்டி வரும் இவர்கள் இந்திய ரசிகர்கள் செய்யும் எல்லை மீறிய சேட்டைகளால் மோதல் மற்றும் வாக்குவாதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் சில திரையரங்குகள் இதற்கு கட்டுப்பாடு விதிப்பதுடன் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் அங்கு பறக்க விடும் பேப்பர் குப்பைகளை அவர்களே சுத்தம் செய்து தர உத்தரவிடுகின்றன.

குறிப்பாக திரையரங்குகளில் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் செய்யும் ரகளையால் அமெரிக்காவில் இந்தியர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வீர சிம்ம ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தை காண வந்த தெலுங்கு ரசிகர்களின் செயலால் ஆத்திரமுற்ற அமெரிக்க இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி கலாச்சாரம் அதிகமுள்ள நாட்டில் திரையரங்குகளில் அதிகரித்து வரும் இதுபோன்ற மோதல்கள் இன ரீதியிலான மோதலில் முடிந்துவிட வாய்ப்புள்ளதாக ஒரு சில இந்திய ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.