டில்லி

டில்லியில் அமைச்சர் ஒருவருக்கு அம்மாநிலத் தலைமைச் செயலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வரும் நிலையில், டில்லி அரசின் சேவைத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், டில்லி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அவர் தனது புகாரில், ”டில்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மே மாதம் 16ம் தேதி சிவில் சர்வீசஸ் வாரியத்தின் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.  நாங்கள் அன்றிரவு 9.30 மணி வரை தலைமைச் செயலாளருக்காகக் காத்திருந்தோம்.

மேலும் அவருக்கு நாங்கள் காத்திருக்கும் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பி அவரும் தான் வருவதாகக் கூறினார்.   நான் இரவு 9.30 மணியளவில் அலுவலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடிதம் எழுதியுள்ளார். புகாரில் தமக்குத் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.