திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடுஞ்செயலை செய்த  நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், அந்த பகுதியில் உள்ள சிலர்மீது காவல்துறை சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த மாபாதக செயலில் ஈடுபட்டவர்களை விசிக உள்பட சில கட்சிகள் பாதுகாக்க நினைக்கிறது.

இந்த நிலையில்,  திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மாநகராட்சி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்துகொள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர்.

இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது. அதையறிந்த வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப்படுத்தினர். அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.

இந்த தண்ணீர் தொடட்டியாது, குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய உப்பு தண்ணீர் தொட்டி என கூறப்படுகிறது. இந்த தொட்டியில் மனிதக் கழிவை வீசிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், இந்த பகுதியில்  கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தராளமாக புழங்கி வருவதாகவும், இதனால் பல சமூக விரோதிகளின் புகலிடமாக இந்த தண்ணிர் தொட்டி அமைந்துள்ள இடம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு பல முறை புகார் அளித்தும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்காததே, தற்போது தண்ணீர் தொட்டியில் மல கலக்க காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.