பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி! :  வேல்முருகன் அதிர்ச்சி அறிக்கை 

Must read

சென்னை:
வேலூர் சிறையில் பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது என்றும்,  ஆகவே  அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

வேல்முருகன்
வேல்முருகன்

இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“ராஜிவ் கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்யாமல் சிக்க வைக்கப்பட்டவர் பேரறிவாளன். இதை விசாரணை அதிகாரியாக தியாகராஜனே வெளிப்படையாக பகிரங்கப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் கால்நூற்றாண்டு காலமாக தூக்குத் தண்டனை கைதியாக, ஆயுள் தண்டனை கைதியாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளன்.
சிறையில் நல்லொழுக்கத்துடன் ஒரு ஆசிரியராகவே உருவெடுத்திருக்கிறார் பேரறிவாளன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படுவார் என ஒட்டுமொத்த தமிழினமே காத்திருக்கிறது.. இந்த நிலையில் இன்று வேலூர் சிறையில் ராஜேஷ் என்ற சக கைதி பேரறிவாளனை கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாக இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறான். இது உலகத் தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. தற்போது பேரறிவாளனுக்கு கையில் 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடமாநில கொள்ளை கும்பலாலும் ரவுடிகளாலும் வேலூர் சிறையில் பேரறிவாளன் உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது.
ஆகையால் தமிழக அரசு தமக்கு அதிகாரம் உள்ள அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளனை கொல்ல முயற்சித்த சக கைதி ராஜேஷை உடனே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” –  இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article