வேலூர் :

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் காரணமாக அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி  காரில் எடுத்துச்சென்ற ரூ.10லட்சம் தேர்தல் பார்வையாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்ற போது, பணப்பட்டுவாடா காரணமாக, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில், திமுக சார்பில் கடந்தமுறை போட்டியிட்ட திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும்,  அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகமே மீண்டும் போட்டியிடுகிறார்கள். அதன்படி வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற உள்ளது.

தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது  வேட்புமனு  ஜூலை11ந்தேதி தொடங்கி நாளையுடன் (18ந்தேதி) முடிவடைய உள்ளது. . தற்போது அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து உள்ளது.

இந்த நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். . வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 10 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

இந்த பணத்தை காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரவீன் ராஜ் என்பவர் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு   வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த வாரம் சத்துவாச்சாரியை அடுத்த வசூரில் திமுக பிரமுகர் தம்பி  வீட்டில் வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர்  நடத்திய சோதனையில் ரூ.27 லட்சம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.