சென்னை உயர்நீதி மன்றம் : பாழாகும் அரசு வாகனங்கள்

சென்னை

நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்ட அரசு வாகனங்கள் உபயோகப்படுத்தாமல் புழுதி படிந்து துருப்பிடித்து பாழாகும் நிலையில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலும் நீதிபதிகள் இல்லத்திலும் உள்ளன.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு சில மாதங்களுக்கு முன் அரசு சார்பில் வழங்கப்பட்ட சொகுசு வாகனங்களில் 54 வாகனங்கள் உபயோகப்படுத்தப்படவில்லை.  அவைகளில் 30 வாகனங்கள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், 24 வாகனங்கள் நீதிபதிகளில் இல்லத்திலும் உள்ளன.  தற்போது அந்த வாகனங்கள் தூசு படிந்து கவனிப்பாரற்று கிடக்கின்றன.  சில கார்கள் துருப்பிடிக்கவும் ஆரம்பித்துள்ளன.

சொகுசு வாகனங்கள் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் போது ஏற்கனவே அவர்களுக்கு அரசால் அளிக்கப்பட்டிருந்த பழைய வாகனங்கள் திருப்பி தரவேண்டும் என சொல்லப்பட்டிருந்தது.  இந்த சொகுசு வாகனங்களில் எரிபொருள் செலவு அதிகமாவாதாலும், மிகவும் மெதுவாகவே செல்ல வேண்டியும் இருப்பதால் நீதிபதிகள் இந்த வாகனங்களை உபயோகிப்பதில்லை.  அதற்கு பதில் ஏற்கனவே உள்ள பழைய வாகனங்களை திருப்பித் தராமல் அதையே உபயோகித்தும் வருகின்றனர்.  இது மட்டும் இன்றி சில நீதிபதிகள் செண்டிமெண்ட்  ஆக வாகனத்தை மாற்ற விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த உபயோகப்படுத்தாத சொகுசு வாகனங்கள் டொயோட்டா கிறிச்டா எனப்படும் ரூ 18 லட்சம் மதிப்புள்ள கார்கள் ஆகும்.  உயர்நீதி மன்ற வளாகத்தினுள் உள்ள 30 வாகனங்களில் பல வாகனங்களின் டயர்கள் காற்று இறங்கிப் போய், முகப்பு விளக்குகள் உடைபட்டு பரிதாபமாக காட்சி அளிக்கின்றன.   எல்லா வாகனங்களிலும், முன்னும், பின்னும், அரசு முத்திரையுடன் JUDGE – MADRAS HIGH COURT என ஆங்கிலத்தில் போர்டு உள்ளது.

அரசுச் சொத்து இப்படி பாழாவதை எந்த நீதிபதியும் கண்டுக் கொள்ளவில்லை என்பதே வேதனையான விஷயம்.

இப்படி உபயோகப்படுத்தப்படாமல் பாழாகும் வாகனங்களை திரும்பப் பெற அரசு எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பதே மேலும் வேதனையூட்டும் விஷயம்.

இனியாவது இந்த நிலை மாறுமா?

அரசுச் சொத்து பாழாகாமல் பாதுகாக்கப்படுமா??

பொறுத்திருந்து பார்ப்போம் !!

 


English Summary
Vehicles given to judges are rusting away in HC Campus