நீலகிரியில் புலி வேட்டைக்காரர்கள் : திடுக்கிடும் தகவல்!!

தகமண்டலம்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் புலி வேட்டையாடும் கும்பல் காணப்பட்டதால் வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர் தற்செயலாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு கும்பல் உதகமண்டலம் எமரால்ட் பகுதியில் கண்டார்.  அவர்களை விசாரித்த போது தாங்கள் அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வசிப்பதாகவும், தங்கள் கூட்டத்தில் உள்ள பெண்கள் நகருக்குள் சென்று பிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.   ஆனால் அவர்கள் புலி வேட்டையாடவே இங்கு வந்திருக்கலாம் என சந்தேகித்து, அவர்களை கண்காணிக்க உத்தரவிட்டார்.  புலி வேட்டை பற்றி ஏதும் தகவல் வரவில்லை என்பதினால் கண்காணிப்பு குறைத்துக் கொள்ளப் பட்டது.

திடீரென அந்த கும்பல் அங்கு காணப்படவில்லை.  விசாரித்ததில் அவர்கள் இங்கு பிச்சை சரிவரக் கிடைக்காததால் வேறு ஏதோ ஊருக்கு சென்றிருக்கலாம் என தெரிய வந்தது.   ஆனால் அதிகாரிகள் ஏதோ ஒரு புலியை வேட்டையாடிய பின் அதன் தோல், மற்றும் பாகங்களை விற்பதற்காக இடம் மாறி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.   இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த கும்பலைப் பற்றி மூத்த வன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது :

”வழக்கமாக இவர்கள் கூட்டத்து பெண்கள் வன எல்லைகளில் சிறு பெட்டிக்கடை வைப்பார்கள், ஆண்கள் வனத்தினுள் சென்று வேட்டையாடி வருவார்கள்.  இந்த கும்பலின் ஆண்கள் ஒரு வார கால அவகாசத்திலேயே புலி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டுபிடித்து வேட்டையாடும் திறமை கொண்டவர்கள்.  இவர்களுக்கு சர்வதேச அளவில் வனவிலங்கு வியாபாரிகளின் தொடர்பு உள்ளது.  இவர்கள் சாம்ராஜ் நகர், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அடிக்கடி வந்து வேட்டையாடுவது வழக்கம்.  இவர்கள் எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதும் எப்படி புலித்தோல் மற்றும் பாகங்களை எடுத்து விற்கின்றனர் என்பதும் இன்றுவரை யாருக்கும் தெரியாது” என கூட்டத்தினரை பற்றி தெரிவித்தார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ”தற்போது உள்ள நிலையில் வனத்துறை அதிகாரிகளை மட்டும் வைத்து இவர்களை பிடிக்க முடியாது.  மற்ற துறைகளும் உதவினால் மட்டுமே இவர்களை கண்டுபிடிக்க முடியும்” என்று கூறினார்.

ஆனால் இதற்குள் அவர்கள் தங்கள் ஊருக்கே திரும்பி இருக்கலாம் என நீலகிரி மக்கள் கூறுகின்றனர்.


English Summary
Tiger hunters found in Nilgiris