சென்னை:

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி, தனது உயிருக்கு ஆபத்து என்று கடிதம் எழுதி உள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக மத்திய, மாநில அரசுகளுக்கு தொழிலதிபர் சேகர் ரெட்டி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டில்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி மீது மத்தியஅரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பை தொடர்ந்து, சேகர் ரெட்டியின்  வீடு மற்றும் அலுவலகங்களில், பண மதிப்பிழப்பின்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் ரூ.120 கோடி பணம், அதிக அளவிலான தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும், ரூ.33 கோடி புதிய நோட்டுகள் வைத்திருந்ததாக சிபிஐ போலீஸாரும் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யயப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், இதுவரை இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 2 வழக்குகளிலும் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சேகர் ரெட்டியை கடத்தி கொலை செய்ய புழல் சிறையில் உள்ள சிலல் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக  தமிழக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இதனால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி, டடில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவில் சேகர் ரெட்டி புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதினார். ஆனால், தமிழக காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, இதுகுறித்து  டில்லி போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மீண்டும் சேகர் ரெட்டிக்கு மிரட்டல் வந்துள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும் உடனடி ஆபத்து இருப்பதாக மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும், அதற்கான தொகையை தாம் செலுத்த தயாராக இருப்பதாகவும் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

சேகர் ரெட்டியின் இந்த கடிதம் மற்றும் அவரை கொலை செய்ய சதி திட்டம் ஆகியவ்ற்றை பார்க்கும்போது,

சேகர் ரெட்டியின் மணல் குவாரி பிசினஸ் உள்பட பல்வேறு தொழில்களில் இந்நாள், முன்னாள் முதல்வர்கள், சசிகலா குடும்பத்தினர்  என பலர் கூட்டாளிகளாக இருக்கும் நிலையில், தற்போது தனது உயிருக்கு ஆபத்து என்ற தகவல் வெளியாகி இருப்பதால், தன்னை காலி செய்ய அரசியல்வாதிகள் முயற்சி செய்யலாம் என்ற சந்தேகமும் ரெட்டிக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்தே டில்லி காவல்துறைக்கும் ரெட்டி கடிதம் எழுதி பாதுகாப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.