டில்லி:

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது வேதாந்தா நிறுவனம்.

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு  எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, வேதாந்தா சார்பில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்க்கொல்லி உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட் டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். அதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து மூடியது.

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளின் பேரில், ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், வேதாந்தா கோரிக்கையையும்  நிராகரித்தது. ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று கூறிய  உச்சநீதி மன்றம், ஆலையை  மூடிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தை நாட உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.