“தமிழ் மாணவர்களை வதைக்கிறார் “நாம்தமிழர்” பிரமுகர் ஹூமாயூன்!”: கொதிக்கும் மாணவர்கள் – என்ற தலைப்பில் கடந்த ஆறாம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.
குடந்தை அருகே உள்ள அன்னை கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக் மாணவர்களின் புகாரை அந்த செய்தி கட்டுரையில் வெளியிட்டிருந்தோம்.
“தலித் மற்றும், மதம் மாறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு அளிக்கும் நிதியை அந்த பாலிடெக்னிக் நிர்வாகம் மோசடியாக எடுத்துக்கொள்கிறது என்று மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தார்கள்.  இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்கள்.
அந்த செய்தி:
https://patrikai.com/tamil-students-torture-naam-tamilar-humayun-annai-polytechnic-kumbakonam-boiling-students/
இந்த கட்டுரையை படித்த, பாலிடெக்னிக் தாளாளர் ஹூமாயூன், நம்மை தொடர்புகொண்டு தனது தரப்பைத் தெரிவித்தார்.

திருமா மறறும் வி.சி. நிர்வாகிகளுடன் ஹூமாயூன்
திருமா மறறும் வி.சி. நிர்வாகிகளுடன் ஹூமாயூன்

“கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் உட்பட எங்களது கல்விக் குழுமத்தில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தலித் மாணவர்கள்தான். தலித் மாணவர்களுக்கான பணத்தை கல்லூரி நிர்வாகம் ஏமாற்றுகிறது என்றால், இந்த நான்காயிரம் மாணவர்களும்தானே போராட வேண்டும். ஆனல் மிகச் சில மாணவர்கள்தான் போரட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
கலைக்கல்லூரி முதல்வர் மற்றும் பல பேராசிரியர்கள் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள். பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு படிக்கும் தலித் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்துகொடுத்திருக்கிறோம்.
இந்த நிலையில்தான் ஒழுங்கீனமான மாணவர்கள் சிலரை வைத்து,  எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர் செயல்படுகிறார்கள். “விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தஞ்சை திருச்சி மண்டல பொறுப்பாளராக இருக்கும் வழக்குரைஞர் விவேகானந்தன் தான், எங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுபவர்களில் முக்கியமானவர். இவர் தனது ஆட்கள் மூலம், எங்களைத் தொடர்புகொண்டு பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டார். அப்படி தந்துவிட்டால், போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் சில  மாணவர்கள் சிலரை தூண்டி விடுகிறார்.
நாங்கள் பணம் தர மறுத்தோம். அதையடுத்துதான் இப்படி நடந்துகொள்கிறார்” என்றார் ஹூமாயூன்.
மேலும் அவர், “விவேகானந்தனின் செயல்பாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடமே தெரிவித்தேன். அவரும், விவேகானந்தனை தொடர்புகொண்டு, தவறான போக்கில் கல்லூரி நிர்வாகத்தை அணுக வேண்டாம் என்று தெரிவித்தார்.
ஆனால் அதையும் மீறி, விவேகானந்தன் தவறான நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்ற ஹூமாயூன்,  “விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் இப்படி மிரட்டிப்பணம் பறிப்பது இது முதல் முறைய அல்ல. சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் கல்லூரியில் பி.எட். படித்த மாணவி ஒருவர்,  ஏதோ சொந்த பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார். அவர் அரியலூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அவரது இறுதிக்காரியத்துக்கு எங்கள் கல்லூரி பேருந்திலேயே ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் சென்று வந்தார்கள்.
அந்த சம்பவம் நடந்த மறுநாளே அரியலூர் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் என்னை தொடர்புகொண்டு பணம் கேட்டார்கள். நான் தரவில்லை. உடனே, “கல்லூரி நிர்வாக்கினர்தான் அந்த மாணவியின் இறப்புக்குக் காரணம்” என்று  காவல்துறையில் புகார் தெரிவித்தார்கள்.
காவல்துறையும் முழுமையான விசாரணை நடத்தி, மாணவியின் தற்கொலைக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வழக்கை முடித்தது.
சமீபத்தில்கூட ஒரு சம்பவம் நடந்தது. நடந்து முடிந்த மாநாட்டுக்கு வாகன செலவு என்று எங்களிடம் நிதி வாங்கிச்சென்றார் விடுதலை சிறுத்தை பிரமுகர் ஒருவர்.
அதே போல இப்போது விவேகானந்தன், எங்களுடன் பணம் பிடுங்கும் நோக்கில் பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்”  என்றார் ஹூமாயூன்.
55579f1c-bf68-4e43-9521-4c37baa6fd52
இதையடுத்து நாம் விவேகானந்தனை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “அன்னை கல்விக் குழுமத்தில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட தலித் மாணவர்கள் படிப்பது உண்மைதான். தகுதியுடைய தலித் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது விதி. அதை மீறி  அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். பாதிக்கப்படும் மாணவர்களுக்காகவே போராடுகிறோம்” என்றவர், “என்னைப் பற்றி எங்கள் தலைவர் திருமாவளவனிடம் ஹூமாயூன் புகார் கூறியது உண்மைதான். தான் செய்யும் தவறுகளை எல்லாம் மறைத்துவிட்டு, ஏதோ நான் பணத்துக்காக போராட்டங்கள் நடத்துவதாக சொல்லியிருக்கிறார்.
இந்த கல்லூரி விவகாரம் குறித்து எங்கள் தலைவர் என்னிடம் கேட்டார். நான் உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன்.
நானோ என் சம்பந்தப்பட்ட யாராவதோ, ஹூமாயூனிடம் பணம் கேட்டதாக நிரூபித்தால் நான் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்றும் சொன்னேன்.
ஹூமாயூனிடம் ஆதாரம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும். சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.