சென்னை: தமிழ்நாடு உட்பட  நாடு முழுவதும் 5 மாநிலங்களில் அமலில் இருந்த  தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில்,  இதுவரை 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில்  சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதைத்தொடர்ந்து,  மேற்குவங்கத்தில் ஒரு தொகுதி தவிர்த்து, தமிழ்நாடு உள்பட  5 மாநிலங்களிலும் தேர்தல் நிறைவடைந்த நிலையில், நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும்,  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில், 5 மாநிலங்களில் இருந்தும் ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 662 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 105 கோடியே 22 லட்சம் ரூபாய் ரொக்கமும், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,

இதே போன்று, 78 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், 165 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிய வகை உலோகங்கள், 307 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களிடம் மதிப்பு 48 புள்ளி 20 விழுக்காடு அதிகம் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

[youtube-feed feed=1]