சென்னை

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மரணம் தற்கொலையால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் கடந்த 1988-90 ஆம் வருடத்தில் 7 ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் சார்பாகப் பங்கேற்றுள்ளார்.  சர்வதேச அளவில் அதிகம் புகழ் பெறாத அவர் உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.  அவர் 56 பால்களில் செஞ்சுரி அடித்த வீரர் ஆவார்.  அத்துடன் 87-88 ஆம் வருடம் நடந்த போட்டியில் 551 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

அவர் வி பி கான்சி வீரன்ஸ் என்னும் பெயரில் ஒரு கிரிக்கெட் அணியை நடத்தி வந்தார். அந்த அணி தமிநாடு கிரிக்கெட் லீக் அணிகளில் ஒன்றாகும்.   அத்துடன் கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.   அவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.  தற்போது 57 வயதாகும் அவர் நேற்று சென்னையில் அவர் வீட்டில் மரணம் அடைந்துள்ளார்.

இந்த மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாக முதலில் தகவல்கள் வந்துள்ளன.  ஆனால் இப்போது மைலாப்பூர் காவல்துறையினர் சந்திரசேகர்  தற்கொலை செய்துக் கொண்டு இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர், “சந்திரசேகர் தனது காஞ்சி வீரன்ஸ் அணியில் ரூ.3 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.   ஆனால் வருமானம் இல்லாமல் திண்டாடி உள்ளார்.  அதனால் வங்கியில் ஏராளமாகக் கடன் வாங்கி உள்ளார்.  அத்துடன் தனது வீட்டையும் அடகு வைத்துள்ளார்.   கடனை திருப்பித் தர முடியாத நிலையில் அவர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்ததால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.