அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இதனால் இணையத்தில் படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல. உலகத் தமிழர்களை இணைக்கும் மந்திரச் சொல். அந்தப் பெயரை மலையாளப் படத்தில் கேவலமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

எப்படி உங்களால் எங்கள் தமிழ்த் தலைவனை குரூர புத்தியில் சிந்திக்க முடிகிறது? எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்த முடிகிறது? 1988ல் பட்டண பிரவேஷம் என்ற படத்தில் காமெடியாக பிரபாகரன் பெயரை அலட்சியமாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்த படத்தின் இயக்குநர் இந்த ‘வருணே அவஷியமுண்டு’ இயக்குநர் அனூப்பின் தந்தை.

நாங்கள் எங்கள் படத்தில் கேரளாவில் நீங்கள் மதிக்கும் தலைவர்களின் பெயரை பன்றிக்கு வைத்தால் பொறுத்துக் கொள்வீர்களா?

தவறுகளை உணரச் செய்வோம். அந்தப் படத்திலுள்ள சம்பந்தப்பட்ட காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆன்லைன் வெளியீட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரதியிலும் கூட. அதே நேரம் துல்கர் மன்னிப்பு கேட்டது சரியல்ல. இயக்குநர் அனூப் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.