சென்னை: வீட்டில் தனியாக வசித்து வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல திரையிசைப் பாடகி வாணி ஜெயராம்  . சென்னை நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் வாணி ஜெயராம் தனியாக வசித்து வந்த நிலையில், அவர் தலையில் காயத்துடன் மரணமடைந்து கிடந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்குக் காவல்துறையினர், அவரது உடலை உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். உடல் கூறாய்வுக்குப் பிறகுதான் வாணி ஜெயராம் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாணி ஜெயராம் தனியாக தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் வீட்டு வேலைக்கார பெண்  மலர்க்கொடி என்பவர்  இன்று காலை 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியும் திறக்காததால், அருகில் இருந்தவர்கள் மூலம் அழைத்தும் கதவு திறக்கப்படாததால், காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரிக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் எடுத்து வந்த வீட்டு சாவி மூலம் கதவு திறக்கப்பட்டு, வீட்டுக்குள் சென்றனர். வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வாணி ஜெயராம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால், அவரது மரணத்தை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணியம்மா..!