மும்பை: வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி ஒரு மாதத்திற்குள் 4வது மறையாக மாடுகள் மீது சேதமடைந்து உள்ளது. இன்று  மும்பையில் இருந்து  குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் ஒரு காளை மாட்டின் மீது மோதி சேதமடைந்தது.

வந்தே பாரத் எனப்படும்  அதிவிரைவு விரைவு ரயிலின் முதல் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரையும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6மணி நேரத்திற்குள் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ரயில்மீது மாடுகள் மோதி விபத்துக்குள்ளாவது தொடர்ந்து வருகிறது, இந்த ரயில் சேவை இயக்கப்பட்ட முதல் நாளே  எருமை மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து, 2வது நாள் பசு மாடு மோதியது. இந்த நிலையில், தற்போது 3வது முறையாக காளை மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

 இன்று காலை  மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காந்திநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது,   காலை 8..17 மணி அளவில் அதுல் என்ற பகுதியில்  தண்டவாளத்தின் குறுக்கே வந்த காளை மாடு மீது ரயில் மோதியது. இதனால் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. இதனால் ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்றது.

வந்தே பாரத் ரயிலை குறிவைத்து மாடுகள் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மாடு மோதுவதை கூட இந்த ரயிலால் தாங்க முடியாத நிலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால்,அதில் உள்ள பணிகளின் நிலைமை என்னவாகும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.