வல்லக்கோட்டை முருகன் கோவில்
வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாகக் கருதப்படும் இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும். முருகனின் இரு புறங்களில் வள்ளி, தெய்வானை உள்ளனர். கருவறையைத் தவிர கோயில் சுற்றுகையில் கணபதி, உற்சவ திருவுருவம், சண்முகர் மற்றும் அம்மனுக்குச் சன்னதிகள் உள்ளன.
சிறப்புத் திருவிழாக்கள்:
தைப்பூசம், கந்த சட்டி, ஆடிக் கிருத்திகை
அருணகிரிநாதரின் ஏழு திருப்புகழ் பாடல்களில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.
வல்லன் கோட்டை பெயர்க்காரணம்
இலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரைப் பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். இந்த மன்னனைக் காண நாரத முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனோ நாரதரைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அருகிலிருந்த வனத்திற்குச் சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பலநாடுகளை வென்று வெற்றிக்களிப்பில் வந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட நாரதர், பகீரதனின் ஆணவத்தை அடக்க இவன் தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். பின் அவனிடம் தானே வலியச் செறு, கோரனே! நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இலஞ்சி நாட்டை வென்றால் தான் உனது திக் விஜயம் நிறைவுபெறும், என்று தனக்கே உரித்தான பாணியில் சிண்டு முடித்து விட்டார்.
அசுரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். பகீரதனைப் போரில் வென்றான் அசுரன். நாடு நகரம் என அனைத்தும் இழந்த மன்னன் காட்டிற்குச் சென்றான். அங்கு நாரத முனிவர் இருந்தார். துர்வாச முனிரிடம் சென்று கெஞ்சினால் நல்வழி காட்டுவார் எனக் கூறி சென்று விட்டார்.
பகீரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டான். பின் ஒரு வழியாகத் துர்வாச முனிவரைத் தேடிக் கண்டு பிடித்து அவரிடம் தன் நிலையைக் கூறி நாட்டை மீட்க வழி கேட்டு மன்றாடினான், துர்வாசர் அவனிடம், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இங்குள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்று கூறிச்சென்றார்.
இவனும் துர்வாசர் கூறியபடி முருகனை வழிப்பட்டான். சிறிது காலம் கழித்து முருகனுக்கு அவனே ஒரு கோயிலும் கட்டி வள்ளி, தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்தான். இவன் கட்டிய கோயில் தான் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோயில்.