நாளை பிப்ரவரி 14 – காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள், காதலர் தின கொண்டாட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காதலர் தினத்தன்று முக்கிய பங்கு வகிப்பது ரோஜா மலர்கள்.

மலர்களின்  ‘மகாராணி’ என  அழைக்கப்படும் ரோஜா காதலர் தினத்தின் ராணி யாகவும் திகழ்கிறது.  இந்த ரோஜா மலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் பயிர்விக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதல் சின்னமான  ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு காதலர் தின கொண்டாடத்திற்காக ஓசூரில் இருந்து 1 கோடி அள விலான  ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி  செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் பேர் ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமைக்குடிலில் விளையும் ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் கிராக்கி அதிகம்.

இந்த ஆண்டு  காதலர் தினத்துக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி தொடங்கி நடை பெற்று வந்தது.

பல இடங்களில் விளைவிக்கப்படும் ரோஜா மலர்கள் கொய்யப்பட்டு, ஓசூர் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பேக்கிங் செய்யப்பட்டு பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஓசூர் பகுதியில் பயிரப்படும்  தாஜ்மகால் எனப்படும் சிவப்பு ரோஜா மலருக்கு அரபு நாடுகளில் அதிக வரவேற்பு உண்டு. மேலும், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மலர் சாகுபடி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக, ரோஜா மொட்டுக்கள் கருவி விடுவதால், ஏற்றுமதி இலக்கு ஒரு கோடியாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். அதுபோல கடந்தஆண்டை விட இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்திருப்பதாகவும்,  ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.