தூத்துக்குடி:
நெல்லை அருகே கொடைவிளையில் உள்ள, வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவவனத்தில் இருந்து  30 டன் கனிம மணல் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் கனிம மணலை வெட்டி எடுக்கும் தொழிலில் ஏக போகமாக  ஆட்சி செய்து வரும் வைகுண்டராஜன்,  தமிழக முதல்வர். ஜெயலலலிதா தரப்பின் பல நிறுவனங்களில் பங்குதாரராகவும்  இருப்பவர். குறிப்பாக ஜெயா டிவியின் பங்குதாரர்களில் இவரும் ஒருவர் என்று ஏற்கெனவே  தகவல் உலவியது.
வைகுண்டராஜன் மூலமாக, அதிமுகவில் முக்கிய பதவிகளைப் பெற்றவர் பலர். தற்போது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் சசிகலா புஷ்பா எம்.பியும், அவர்களில் ஒருவர்.
வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ், சட்டத்துக்குப் புறம்பாக கனிம மணலை அள்ளுவதாகவும், ஏற்றுமதி செய்ததாகவும் புகார்கள் கிளம்பின. பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த விவகாரம் குறித்து ஆராய சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸை உயர்நீதிமன்றம் நியமித்தது.
download
சகாயத்தின் விசாரணைக்கு அரசு தரப்பு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. அந்த அளவுக்கு  ஆளும் தரப்பில் வைகுண்டராஜனுக்கு செல்வாக்கு உண்டு என்றும் செய்திகள் வெளியாயின.
ஆனால் ஜெயலலிதா தரப்புடன் வைகுண்டராஜனுக்கு கருத்து வேறுபாடு உருவானது.   இந்த நிலையில் நியூஸ்7 என்ற தனி சேனலை தொடங்கினார் வைகுண்டராஜன்.  அதிமுகவுக்கு எதிரான செய்திகளுக்கு அச் சேனல் முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு கருத்து உண்டு. இந்த நிலையில், சட்டசபை தேர்தலின் போது கனிம மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த நிலையில் தன்னை ஜெயலலிதா அடித்தார் என்று ராஜ்யசபாவில் கதறி அழுதார் சசிகலா புஷ்பா. இவரைத் தூண்டிவிட்டதே வைகுண்டராஜன் தரப்புதான் என்று தகவல் பரவியது.
இந்தசூழ்நிலையில், இன்று நெல்லை அருகே கொடைவிளையில் வைகுண்டராஜனின் விவிமினரல்ஸுக்கு கனிம மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் தடுத்து ஆய்வு செய்தனர்.  அந்த லாரிகளில் இருந்த 30 டன் கனிம மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  பொக்லைன் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வைகுண்டராஜன் நிறுவனத்தின் மீது பல்வேறு தரப்பினர் வெளிப்படையாக புகார் தெரிவித்தும் நடவடிக்கையில் இறங்காத தமிழக அரசு அதிகாரிகள், தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வைகுண்ராஜனின் கனிம தொழிலுக்கு எதிராக, தமிழக அரசு சாட்டையை கையில் எடுக்க தொடங்கியிருப்பதை உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.