சென்னை: 
மிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது:
ASSEMBLY
காவலின் போது சிறைவாசிகள் தப்பித்தல் மற்றும் சிறைவாசிகள் மீதான தாக்குதல்கள் போன்ற அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கவும், வழிக்காவல் மற்றும் போக்குவரத்திற்காக ஆகும் செலவைக் குறைக்கும் வகை யிலும் காணொலிக் கலந்துரையாடல் மூலம் சிறைவாசிகளின் காவல் நீட்டிப்புக்கு வழி செய்யும் வகையிலான திட்டம் ஏற்கனவே  அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இத்திட்டம் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகள் உள்ளிட்ட 33 சிறை வளாகங்கள், 136 நீதிமன்ற வளாகங்களில் உள்ள 352 நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.
காணொலிக் கலந்துரை யாடல் மூலம் சிறைவாசிகளை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் வசதி இந்த ஆண்டு மேலும், 44 நீதிமன்ற வளாகங்களிலுள்ள 51 நீதிமன்றங்களை இணைக்கும் வகையில், 5 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.
jaya-1
சிறைகளின் பிரதான நுழைவு வாயில், நேர்காணல் அறை மற்றும் உயர் பாதுகாப்புத் தொகுதிகள் போன்ற முக்கியமான இடங்களில் சிறைவாசிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்திட அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சிறைச்சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க வேண்டிய தேவையைக் கருத்திற்கொண்டு, மேலும் 100 சி.சி. டி.வி. மற்றும் ஐ.பி. கேமிராக்கள் பொருத்தப்படும்.
மேலும், இச்சிறைகளிலுள்ள சிறைவாசிகளின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். இவை 4 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
நீதித்துறை செவ்வனே செயல்படத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை  அரசு ஏற்படுத்தி வருகிறது. அனைத்து நீதிமன்றங்களும் தேவையான வசதிகளுடன் சொந்தக் கட்டடங்களில் இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனவேதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக 511 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்பொழுது 89.6 சதவீத நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் 13 நீதிமன்றங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் 33 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 8 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்துடன் கூடிய 7 கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் 23 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
எனது இந்த அறிவிப்புகள் மூலம் திருப்பூரில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படுவதோடு நீதிபதிகளுக்கும் குடியிருப்புகள் கிடைக்க வழிவகை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.