சென்னை: மதிமுகவில் தனது மகனுக்கு வைகோ பதவி வழங்கியதற்கு, பல மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 3 மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்து வைகோ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் . சண்முக சுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தலைமைக் கழகம் தாயகத்தில், 11.05.2022 அன்று காலை 11 மணிக்கு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடைபெற உள்ளது என்றும், அதில் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், 29.04.2022 அன்று அவர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.
கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு நேரில் வந்து மூவரும் விளக்கம் அளிக்காமல், 07.05.2022 மற்றும் 09.05.2022 தேதியிட்ட கடிதங்களை கழகப் பொதுச்செயலாளருக்கு அனுப்பி உள்ளனர். அக்கடிதத்திலும், 05.04.2022 மற்றும் 18.04.2022 அன்று, அவர்களுக்கு அனுப்பப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த புகார்களுக்கு உரிய விளக்கம் கூறாமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்களை விசாரிக்க, தார்மீக உரிமை இல்லை என்று கூறி இருக்கின்றார்கள்.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான மேற்கண்ட மூவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மற்றும் அவர்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்தது. அதன் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு அளித்துள்ள பரிந்துரை மற்றும் கழக சட்டதிட்ட விதி எண் 19, பிரிவு-12 மற்றும் விதி எண் 33, பிரிவு-5 இன் கீழும், புலவர் சே.செவந்தியப்பன், ஆர்.எம். சண்முகசுந்தரம், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோர், ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கழகத்தில் அவர்கள் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றார்கள் என்று, இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மகனுக்கு பதவி வழங்கியதை எதிர்ப்பதா? எதிர்ப்பாளர்களை சஸ்பெண்டு செய்தார் வைகோ
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செவந்தியப்பன் சிவகங்கை மாவட்ட செயலாளராகவும், சண்முக சுந்தரம் விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், செங்குட்டுவன் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர்.