சென்னை:
டபழனி ஆண்டவர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம்.

இந்த கோயிலில் கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுர விமானங்களுக்கும் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டது. சரியாக 10.30 மணி அளவில் கோபுரங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து விமானங்களுக்கும் அபிசேகம் செய்து கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.