டெல்லி: இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் செலுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, உலகம் முழுவதும் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போதைய நிலையில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 29,46,39,511 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை. இதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளையில் இதுவரை பரவியுள்ள கொரோனா வைரஸ் குழந்தைகளுக்கு அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், கொரோனா 3வது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில்,  பல நாடுகளில், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா உள்பட சில நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி வருகிறது. அமெரிக்கா, இதுவரை கிட்டத்தட்ட 6 லட்சம் (12 – 15 வயதுள்ள) குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திவிட்டது. அடுத்த ஆண்டு 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதுமான பாதுகாப்பு தரவுகளை சேமித்து வைக்க உள்ளது அமெரிக்கா.

பிரிட்டன் பெரியவர்களுக்கு அதி விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. இந்த ஆண்டின் ஜூலை மாதத்துக்குள் இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விடும்.   இந்தியாவிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி விரைவில் போடப்படும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியளார்களை சந்தித்த  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா,  நாட்டில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது, அதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  இதன் இறுதிக்கட்ட முடிவு வெளியானதும், வரும் செப்டம்பரில் குழந்தைகளுக்கு போட திட்டமிடப்பட்டு வருகிறது  என்று எதெரிவித்துள்ளார்.