சென்னை: தமிழகத்துக்கு மேலும் 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இன்று வர உள்ளன என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் ஏராளமானோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதால் நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் திமுக அரசு உடனுக்குடன் தடுப்பூசிகளை வரவழைத்து மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில்  21.06.2021 நிலவரப்படி தமிழகத்திற்கு இதுவரை  1,29,19,530  டோஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. இவற்றில் மொத்தம் 1,24,00,061 டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் 96% தடுப்பூசிகள் தீர்ந்து விட்டன.

இந்த நிலையில், இன்று மேலும், 6.72 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சென்னை வருகிறது. இவற்றில்  2.05 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள், 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வர உள்ளன என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.