ராஞ்சி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெருமழை, அதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், பல பகுதிகளில் நிலச்சரி ஏற்பட்டதுடன், ஏராளமான வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

உத்தரகாசி மாவட்டம் தரலி என்ற பகுதியில் கீர் கங்கா ஆற்றில் மேகவெடிப்பால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாசி-ஹர்சில் சாலையை திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் அடைத்தன; திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பலர் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணியில்,  மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இந்த சோக சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் தாமி நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மேகவெடிப்பால் கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றின்  மறுபுறத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. காட்டாற்று வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இதனிடையே சியானா சட்டி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.   திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, இதனால் உத்தரகாசி-ஹர்சில் சாலையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. பழங்கால சிவன் கோயில் கல்ப் கேதாரும் மண்ணில் புதைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றி இணைப்பை மீட்டெடுக்க ஜேசிபிகள் உட்பட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) குழுவும் சம்பவம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேக வெடிப்பு காரணமாக, உத்தரகாசி-ஹர்சில் பாதையில் உள்ள பத்வாடியில் உள்ள சாலை முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஹர்சில் நோக்கிச் செல்லும் சாலை இரவு முழுவதும் தடைபட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய இடமான தாராலி, அந்த இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  காட்டாற்று வெள்ளம் காரணமாக வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தாராலியிலும் சுகி டாப் பகுதியிலும் இரண்டு மேக வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக பரவலான அழிவு ஏற்பட்டது. தாராலியே அதிக சேதத்தை சந்தித்தது. அந்தப் பகுதியில் மண்சரிவுகளும், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

டேராடூனில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற புஷ்கர்சிங் தாமி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதற்கிடையில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சுமார் 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் திடீரென பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், கிராம மக்கள் சிக்கியுள்ள பரபரப்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டபோது சேற்றுக்குள் சிக்கி உயிர்பிழைத்த நபர், சேற்றுக்குள் இருந்து வெளியேறி நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் காட்சி மற்றும் மேகவெடிப்பு காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். கனமழை காரணமாக உத்தரகாண்ட் பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நைனிடால் பகுதியில் உள்ள ஹனுமன் கோயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்தியா-சீன எல்லையை இணைக்கும் மலாரி தேசிய நெடுஞ்சாலை அருகே கனமழை காரணமாக சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது

இந்த காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அங்கிருந்த  பழங்கால சிவன் கோயில் கல்ப் கேதாரும் இடிபாடுகளுக்குள் புதைந்தது  கீர் கங்கா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இங்குள்ள பழங்கால கல்ப் கேதார் கோயில் இடிபாடுகளில் புதைந்தது. முந்தைய பேரழிவின் காரணமாக இந்த கோயில் பல ஆண்டுகளாக நிலத்தடியில் புதைந்து கிடந்தது, அதன் முனை மட்டுமே தரையில் தெரியும் நிலையில் தற்போது மீண்டும் புதைந்துள்ளது.

முன்னதாக, 1945 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. பல அடி நிலத்தடியில் தோண்டிய பிறகு, கேதார்நாத் கோயிலைப் போன்ற ஒரு பழங்கால சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. கோயில் தரை மட்டத்திற்கு கீழே இருந்தது, பக்தர்கள் கோயிலில் பிரார்த்தனை செய்ய கீழே செல்ல வேண்டியிருந்தது. கீர் கங்கையிலிருந்து சிறிது தண்ணீர் பெரும்பாலும் கோயிலின் கருவறையில் நிறுவப்பட்ட ‘சிவலிங்கத்தின்’ மீது விழும் என்றும், அதற்காக ஒரு பாதை உருவாக்கப்பட்டதாகவும் மக்கள் கூறுகிறார்கள். கோயிலுக்கு வெளியே கல் சிற்பங்கள் உள்ளன. கேதார்நாத் கோவிலில் உள்ளதைப் போலவே, கருவறையின் ‘சிவலிங்கம்’ நந்தியின் பின்புறம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கதுரே பாணியில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயிலின் கட்டிடக்கலை கேதார்நாத் தாம் கோயிலைப் போன்றது.

Thanks:  Photos and Videos ANI and PTI