லக்னோ: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய யோகி தலைமையிலா மாநில பாஜக அரசு, இதுதொடர்பாக குற்றப்பத்திரிகையில்  மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா பெயரையும் இணைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்கிம்பூர் விவகாரத்தில் 5000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை உ.பி. காவல்துறை இன்று  கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயர் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் ஆக சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த தாக கூறப்பட்டது.  அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வன்முறைச் சம்பவத்தில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உ.பி. காவல்துறை  மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவர்களை கைது செய்வதில் மெத்தனம் காட்டியது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் யோகி அரசை கடுமையாக சாடியதுடன், இதுகுறித்து விசாரணை குழு அமைத்தும் உத்தரவிட்டதுடன்,  குற்றவாளிகளை கைது செய்யவும் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்தே உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், உச்சநீதிமன்றம் அமைத்த  புலனாய்வு குழுவினர்,  லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட  வன்முறை சம்பவம் ‘திட்டமிட்ட சதி’ என அறிக்கை தாக்கல் செய்தனர். இது மாநில பாஜக அரசுக்கு பேரிடியாக விழுந்தது.
இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மாநில காவல்துறை, லக்கிம்பூர் விவகாரத்தில் 5000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், லக்கிம்பூர் கேரி வன்முறைக்கு காரணமானவர்களில்,மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயர் பிரதான குற்றம்சாட்டப்பட்டவர் ஆக சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும், “குற்றப் பத்திரிக்கையில் வீரேந்திர சுக்லா என்ற மேலும் ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் மீது ஐபிசி 201வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.