உ.பி.யில் இஸ்லாமிய பண்டிகை அன்று மத கலவரம் ஏற்படுத்த சதி?: போலீஸ் விசாரணை

லக்னோ:

முகரம் பண்டிகையின் போது உ.பி.யில் மத கலவரம் ஏற்படுத்த மாடு பலியிடும் சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உ.பி. மாநிலம் கோண்டா, கத்ரா பஜார் காவல் நிலைய எல்லையில் உள்ள பத்புரா கிராம வயல்வெளியில் கடந்த 1ம் தேதி இரண்டு நபர்கள் ஒரு மாட்டை வெட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதை கண்ட 12 வயது சிறுவன் உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுத்தான்.

மக்கள் திரண்டு வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து இருவரையும் பிடிக்க முயன்றபோது அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட நபர் ராம் சேவாக் தீக்ஷித் என்பது தெரியவந்தது. தப்பியோடிய நபர் மங்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட ராம் சேவாக் மீது கொலை, வழிப்பறி உள்பட 18 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதேபோல் மங்கள் மீதும் 3 கிரிமினல் வழ க்குகள் நிலுவையில் உள்ளது.

அந்த மாட்டை அதே பகுதியை சேர்ந்த பிரசாத் தீக்ஷித் என்பவரிடம் திருடியதாக ராம் சேவாக் தெரிவித்துள்ளார். மேலும், மங்கள் மற்றும் அவரது தந்தை ராஜ்வன்சி ஆகியோர் மீதான ஒரு கொலை வழக்கில் சுகவன் என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். மாடு திருடி வெட்டிய சம்பவத்தில் சுகவனை சி க்க வைப்பதற்காக இச்செயலில் ஈடுபட்டதாக ராம் சேவாக் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து எஸ்பி குமார் சிங் கூறுகையில், ‘‘இந்து மக்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் முகரம் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் நடக்க இருந்தது. அந்த சமயத்தில் மாட்டை வெட்டி மத கலவரத்தை ஏற்படுத்தும் சதி செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலம் விசாரணை நடக்கிறது.

தற்போது பிடிபட்ட நபர் இந்து பிராமின் சமுதாயத்தை சேர்ந்தவர். அதோடு தப்பியோடிய மங்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
English Summary
Uttar Pradesh: Cops probe conspiracy angle to cow slaughter in uttar pradesh