இஸ்லமாபாத்:

மெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வளர்ந்துவரும் நட்பு இஸ்லாமிய உலகுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் செனட் சபை தலைவர் ரசா ரப்பானி தெரிவித்துள்ளதாக,  அச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..

“உலக சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் நட்புறவு இஸ்லாமிய உலகத்திற்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு உள்ளது.  ஆகவே, இதை எதிர்கொள்ள இஸ்லாமிய உலகம் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில், இன்று பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாளை எந்த ஒரு இஸ்லாமிய நாடாகவும் இருக்கும்.

சட்ட ரீதியான மற்றும் வரலாற்று அந்தஸ்து கொண்ட ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும்.

மேலும், பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர். ஆனாலும், பயங்கரவாதம் மற்றும் அராஜகத்திற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையான பங்களிப்பை அளிக்கும் என்று ரசா ரப்பானி தெரிவித்ததாக செனட்சபை அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.