நியூயார்க்: குரங்கு அம்மை பரவல் எதிரொலியாக, அதை தடுக்கும் நோக்கில், அமெரிக்காவில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகின் 175நாடுகளில் குரங்கம்மை பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து குரங்கம்மை தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் 9 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் 6,600க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை செயலாளர் சேவியர் பெசெரா நேற்று (வியாழன்)  குரங்கு பாக்ஸ் வைரஸிற்கான பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தார், இது தடுப்பூசிகளை விநியோகிக்கவும், பரிசோதனை மற்றும் பொது சுகாதார பிரச்சாரங்களை நடத்தவும் மாநிலங்களுக்கு விரைவாக உதவ மத்திய அரசாங்கத்தை அனுமதிக்கிறது. “இந்த வைரஸை நிவர்த்தி செய்வதில் அடுத்த கட்டத்திற்கு எங்கள் பதிலைக் கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம், மேலும் குரங்கு பாக்ஸை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், இதை சமாளிக்க எங்களுக்கு உதவுவதற்கு பொறுப்பேற்குமாறும் ஒவ்வொரு அமெரிக்கரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று பெசெரா செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது கூறினார்.

இதையடுத்து குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்கும் வகையிலும்,  நோயை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உட்பட பல மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும் சுகாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.  அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.