பீஜிங்: சீனாவின் ஹுவேய் நிறுவனம், கடலடி கேபிள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது, மேற்கு நாடுகளை கவலையும் பயமும் கொள்ளச் செய்துள்ளது.

இதன்மூலம், பல தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள், சீன நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் சூழல் நிலவுவதால், அமெரிக்காவின் நிம்மதி பெரியளவில் குலைந்துள்ளது என்றே கூறுகின்றனர்.

அமெரிக்காவின் பெரிய இணையதள நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அமேஸான் போன்றவை, தமக்குத் தேவையான நீளமான கேபிள்களை பெரும்பாலும் தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றன.

தற்போது, உலகளவில் 5ஜி டெலிஃபோனி நெட்வொர்க் சேவையை வழங்கும் வகையில் பணியாற்றிவரும் முன்னணி நிறுவனமான சீனாவின் ஹுவேய் டெக்னாலஜிஸ், கடலடி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஹுவேய் மரைன் நெட்வொர்க்ஸ் பிரிவின்கீழ், உலகம் முழுவம் 100 கடலடி கேபிள்களை கட்டுவிக்கிறது அல்லது மேம்படுத்தி வருகிறது.

கடந்தாண்டு, இந்நிறுவனம், தென்அமெரிக்காவின் பிரேசில் நாட்டிலிருந்து, ஆஃப்ரிக்காவின் கேமரூன் வரை, சுமார் 4000 மைல்கள் நீளத்திற்கு கேபிள் அமைக்கும் பணியை நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி