அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோர்கள் அம்மண்ணில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடியுரிமையை நிறுத்தப்போவதாக அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு அங்கு ஒண்டியுள்ளவர்களை மட்டுமன்றி உலகம் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கனவுடன் வலம் வருபவர்களின் கனவை கலைத்துள்ளது.
பிப்ரவரி 20ம் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை என்ற காலக்கெடு பல யுவதிகளை அவதியுற வைத்துள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குழந்தை பிறப்பை எதிர்பார்த்திருக்கும் பெற்றோர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த உத்தரவால் கலங்கியுள்ள தம்பதிகள் பிப் 20க்கு முன் குறை மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனைகளில் வரிசைகட்டியுள்ளனர்.
இதில் பெரும்பாலும் இந்திய பெண்கள் என்றும் ஏழு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையிலான கர்ப்பிணிகள் இவ்வாறு முன்கூட்டியே குழந்தைபெற துடிப்பதாகவும் தரவுகள் வெளியாகியுள்ளது.
இதுபோன்று குறை மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது குழந்தை மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு பல்வேறு மருத்துவ பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும் அவர்கள் குறைபிரசவத்தில் குழந்தை பெறுவதை கைவிடுவதாக இல்லை.