சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையிர், நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு  2 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில், அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் விருப்பமனு வாங்கி, வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளதுடன், தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை பிரித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுவிட்டது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகளில், மாநில தேர்தல் கமிஷன் கவனம் செலுத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து, மாநில தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் கமிஷன் கூட்ட அரங்கில் இன்று பகல் 11:30 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில், வரப்போகும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.