டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

மே 31ம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. அக்டோபர் 4ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வு கொரோனா காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளுடன் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 72 நகரங்களில் மொத்தம் 6 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்பர் என்று தெரிகிறது.

இந் நிலையில், கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் தேர்வை தள்ளி வைக்க கோரி விண்ணப்பதாரர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன, எனவே தள்ளி வைப்பது சாத்தியம் கிடையாது என்று யுபிஎஸ்சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.