மும்பை:  இனி யுபிஐ வழியாக ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து உள்ளார். மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது,  ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்  இருமாத நாணய கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவுகளை அறிவித்ததார். அப்போது, இந்தியாவே அதிகம் பயன்படுத்தும் பேமெண்ட் நெட்வொர்க் ஆக விளங்கும் யூபிஐ சேவையில் புதிய தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது  என்றவர்,  ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் இதே போன்று வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

யூபிஐ மாற்றம் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசுகையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். குறிப்பாக அதிகப் பணப்புழக்கம் கொண்ட அதிக மதிப்பில் பணப் பரிமாற்றம் செய்யும் இடத்தில் என வகைப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவின் படி இனி மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் யுபிஐ பேமெண்ட் அளவு 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார் . இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் கல்வி மற்றும் ஹெல்த்கேர் சேவைகளுக்கு அதிக அளவிலான தொகையை UPI வாயிலாகவே செலுத்த முடியும் எனத் தெரிவித்தார்  அதிகத் தொகை செலுத்துவதில் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இருக்கும் வேளையில், பெரும் பகுதிகள் மக்கள் இங்குப் பணமாகச் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. இதைத் தடுக்கும் முயற்சியை ஆர்பிஐ எடுத்துள்ளது, இதோடு கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் கணக்குகளை உறுதி செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் யூபிஐ மூலம் 5 லட்சம் வரையில் செலுத்தலாம்.

UPI சேவையை அனைத்து இடத்திலும் எவ்விதமான தடையும் இல்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாகப் பெரும் தொகையிலான டிஜிட்டல் பேமெண்ட் அனைத்தும் கிரெடிட் கார்டு வாயிலாகவே செலுத்தப்படும், தற்போது யூபிஐ சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் Large value retail digital transactions பிரிவில் கிரெடிட் கார்ட் ஆதிக்கத்தை உடைக்கும்.

மேலும், 2023-24ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரிக்கும். சர்வதேச அளவில் நீடிக்கும் பதற்றமான சூழல், உலக பொருளாதார மந்தநிலையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. சர்வதேச சந்தையில் தேவை குறைந்திருந்தாலும், நாட்டின் ஏற்றுமதி அக்டோபரில் சாதகமாகவே இருந்தது.

வங்கிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் நிதிநிலைமையும் ஆரோக்கியமாக உள்ளது. மற்ற நாடுகளின் பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் குறைந்து வருகிறது. தொழில்துறையில் சாதகமான சூழல், உட்கட்டமைப்பிற்காக அரசின் செலவினங்களும் வளர்ச்சிக்கு வித்திடுகிறது என்றார்.

மேலும் கூறியதாவது, மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான இ-ஆணைகள் (e-mandates) வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட், காப்பீடு, கிரெடிட் கார்டு பேமெண்ட் ஆகியவற்றுக்கு e-mandate எனப்படும் தானாகவே கணக்கில் இருந்து பரிவர்த்தனை ஆகும் பணத்திற்கான உச்சவரம்பு ரூ.15,000 இருந்து , ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.