டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 சோனியா நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது  எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் இருக்க சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சோனியாவின் அனுபவமும் தொலைநோக்கு பார்வையும் இந்தியாவை வழிநடத்த வெளிச்சமாக இருக்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்., தலைவர் கார்கே துணிச்சல், தன்னலமற்ற தியாகத்துடன் துன்பங்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டவர் சோனியா. அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தரப்பில் இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இதைத்தொடர்ந்து  சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில்,  பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும். நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும்!’ என்று  கூறியுள்ளார்.