போபால்:

எதிர்வரும் பட்ஜெட் தான் பாஜக.வின் இறுதி பட்ஜெட் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

ம.பி. மாநிலம், நரசிங்கப்பூர் மாவட்டம் காதர்வாரா நகரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்று யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், ‘‘சிங்கிள் பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் சிறு-குறு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள்.எதிர்க்கட்சியாக பாஜக இருந்தபோது இந்த முதலீட்டை எதிர்த்தது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

எதிர்வரும் பட்ஜெட்தான் இந்த பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தது உள்பட பொருளாதாரத்தில் பல சாதனைகளைப் புரிந்ததாக நாம் நம்மையே பாராட்டி கொள்கிறோம். 2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்தது. அதற்கான பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை. பல லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியது. நாடு எந்த பலனையும் அனுபவிக்கவில்லை’’ என்றார்.

சின்ஹா மேலும் பேசுகையில், ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பில் எனக்கும் பங்கு உண்டு. பிரதமர் நரேந்திர மோடி கூட அப்போது அந்த அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டார். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை முழுமையாக இந்த அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. இது எனக்கு உறுத்தலாக உள்ளது’’ என்றார்.