UP school tells students to get ‘Yogi haircut’

 

உத்தரப்பிரதேசம் மீரட்டில் உள்ள தனியார் பள்ளியில், முதலமைச்சர் யோகி ஆதித்யாவைப் போல மாணவர்கள் மொட்டை அடித்துக் கொண்டு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஜெயின் அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்தப் பள்ளியில் 2 ஆயிரத்து 800 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 12 ஆம் வகுப்புவரை உள்ள இந்தப் பள்ளியில், தலையை மொட்டை அடித்துக் கொண்டு வராத மாணவர்களையெல்லாம் பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளது. இதனால், பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு விதித்துள்ள வினோதமான கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.

 

மீரட்டில் உள்ள அந்த தனியார் மேல்நிலைப்பள்ளியில் மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த பள்ளி நிர்வாகக் குழு செயலாளர் ரஞ்சித் ஜெயின் என்பவர், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், எந்தத் தயக்கமும் இன்றி தாங்கள் விதித்த கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

 

“இங்கு வரும் மாணவர்களை ராணுவத்தினரைப் போல முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு வரச் சொன்னோம். அவர்கள் அதைத் தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள். தாடி, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லி உள்ளேன். இது மதர்ஷா அல்லவே. அதனால்தான். அத்துடன் அசைவ உணவுக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளோம். மேலும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இஸ்லாமிய மாணவர்கள், இந்து மாணவியரை ஏமாற்றி காதலிக்க முயற்சிப்பதுடன், ‘கலவாஸ்’ கயிறுகளை அவர்களது மணிக்கட்டில் கட்டியும் விடுகின்றனர். இவற்றையெல்லாம் என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாது. தவிர ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவன் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவியைத் தொடுவதற்கு யாராவது இந்தக் காலத்தில் சம்மதிப்பார்களா?”

 

என்றெல்லாம் அந்தப் பள்ளியின் நிர்வாகி விளக்கமளித்துள்ளார். மதச்சார்பற்ற நாடு என நாம் நம்பிக் கொண்டிருக்கும் இந்தியா தற்போது எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது?